Monday, March 14, 2011

அலெக்சாண்டரை அடிமை ஆக்க ஆசையா?!


கதை இந்தியா மீது படையெடுக்க அலெக்சாண்டர் ஆயத்தமானபோது, அவரது மனைவி தனது ஆசை என்று இப்படிக் கூறினார்;
'இந்தியாவில் 'ரிஷி’கள் எனப்படும் முனிவர்கள் தவ வலிமையால் அதீத புத்திசாலித்தனத்துடன் இருப்பார்கள். அப்படி ஒரு 'ரிஷி’யை எனக்கு இந்தியாவில் இருந்து வரும்போது எனக்காகக் கொண்டுவாருங்கள்!’ படையெடுப்பு முடிந்ததும்,  பிரபலமான ஒரு ரிஷியைக் கண்டுபிடித்துத் தன்னோடு வருமாறு பணித்தார் அலெக்சாண்டர். ரிஷி நிர்தாட்சண்யமாக மறுத்துவிட்டார். அதுவரை, அலெக்சாண்டரின் வார்த்தைக்கு யாரும் மறு வார்த்தை பேசியது இல்லை. உச்சகட்ட கோபத்தில் உறையில் இருந்து தன் வாளை உருவினார் அலெக்சாண்டர். அதைப் பார்த்ததும் ரிஷி முகத்தில் பிரகாசமான புன்னகை. அதுவரை அலெக்சாண்டரின் வாளைப் பார்த் தும் யாரும் சிரித்ததும் இல்லை. கோபத்தையும் தாண்டி ஆச்சர்யத்தில் வளைந்தன அலெக்சாண்டரின் புருவங்கள். 'நீ ஏன் சிரிக்கிறாய்? நான் இப்போது உன்னைக் கொல்லப்போகிறேன் தெரியுமா...’ என்றார்  அலெக்சாண்டர்.
''நீ உனது வாளைப் பயன்படுத் தும் முன் இரண்டு விஷயங்களைப் புரிந்துகொள். அந்த வாளால் நீ என்னைக் கொல்ல முடியாது என்பது முதல் சங்கதி. இரண்டாவது, நீ எனது அடிமைக்கு அடிமையாக இருக்கிறாய்!''
புரியாமல் விளக்கம் கேட்டார் அலெக்சாண்டர். ''அந்த வாளால் என் உடலைத்தான் உன்னால் வெட்டி வீச முடியும். ஆனால், 'நான்’ என்பது இந்த உடல் கிடையாது!''
ஏதோ புரிந்தும் புரியாமல் தலைஅசைத்த அலெக்சாண்டர், ''ஆனால், நான் இந்த உலகத்தின் பேரரசன். என்னை எப்படி உனது அடிமை யின் அடிமை என்றாய்?'' என்று கேட்டார்.
''ஆசை, கோபம் என்ற இரண்டு குணங்களையும் நான் கட்டுப்படுத்தி எனக்கு அடிமையாக வைத்திருக்கிறேன். நான் எப்போதும் அவற்றின் கட்டுப்பாட்டுக்குள் செல்ல மாட்டேன். மாறாக, அவைதான் எப்போதும் என் கட்டுப்பாட்டில் இருக்கும். ஆனால், உன்னைப் பொறுத்தவரை, என்னிடம் அடிமையாக இருக்கும் ஆசை, கோபம் என்ற அடிமைகளிடம் நீ அடிமையாக இருக்கிறாய். அப்படியானால் நான் சொன்னது உண்மைதானே!'' என்பது ரிஷியின் பதில்.
நீதி எப்போதும் அடிமைக்கு அடிமை ஆகாதீர்கள்!


இந்த கதைகள் உங்களுக்கு பிடித்தல் மறக்காமல் உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதவும் , அதுவே எங்களுக்கு ஊக்கமளிக்கும். நன்றி !..

No comments:

Post a Comment