Monday, March 14, 2011

டேய் சூரியா!

ஒரு தடவை சூரியனுக்கும், கடுங்காற்றான சூறாவளிக்குமிடையே சண்டை வந்தது.

""நானே உன்னைவிட வலிமைசாலி!'' என்று சூறாவளிக்காற்று பெருமை பேசிற்று.
""உன்னைவிட நான்தான் வலிமைசாலி!'' என சூரியன் மறுப்பு தெரிவித்தது.
இரண்டு பேரும் யார் வல்லவர் என்பது குறித்து நெடுநேரம் மாறிமாறி வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். இவர்களுடைய வாதப்பிரதிவாதங்களைக் கேட்டுக் கொண்டிருந்த மேகம் சிரித்தது.
""ஏன் சிரிக்கிறாய்?'' என சூரியனும், சூறாவளிக்காற்றும் கேட்டன.
""இரண்டு பேரில் யார் வல்லமைசாலி என்று நீங்கள் வாதப் பிரதிவாதம் செய்து கொண்டிருந்தால், பிரச்னைக்கு எவ்வாறு தீர்வு காணமுடியும்? இரண்டு பேரும் தங்களில் வல்லமைசாலி யார் என்பதை ஏதாவது ஒரு செயலின் மூலம் நிரூபித்துக் காண்பிக்க வேண்டும். அப்போதுதான் யார் வல்லமைசாலி என்ற உண்மை விளங்கும்!'' என்று கூறிற்று மேகம்.
""அப்படியானால் எங்கள் வலிமையை நிரூபித்துக்காட்ட நீதான் ஒரு வழியைச் சொல்லேன்!'' என்று சூரியனும், சூறாவளியும் கேட்டுக் கொண்டன.
மேகம் பூமியில் நடந்து சென்றுக் கொண்டிருந்த ஒரு மனிதனைச் சுட்டிக் காண்பித்தது. அவன் நல்ல உடைகளை அணிந்தவாறு கம்பீரமாக நடைபோட்டு சென்றுக் கொண்டிருந்தான்.
""உங்களில் யார் உங்கள் வலிமையைப் பிரயோகித்து, இந்த மனிதன் தன் உடைகளை முற்றிலுமாகக் களைந்தெரியுமாறு செய்கிறீர்களோ, அவர்தான் வலிமைசாலி எனக் கருதவேண்டும்!'' என்று மேகம் யோசனை கூறிற்று.
""இது நல்ல யோசனைதான்!'' என்று சூரியனும், சூறாவளிக்காற்றும் ஏற்றுக் கொண்டன.
முதலில் தனது வலிமையை நிரூபித்துக் காண்பிப்பதாகக் கூறிவிட்டுச் சூறாவளிக்காற்று செயலில் இறங்கியது. அது தன் சக்தி முழுவதையும் திரட்டி முழுவேகத்துடன் சென்று தரையில் நடந்து சென்று கொண்டிருந்த மனிதன் மீது மோதியடித்து பயங்கரமாக வீசியது.
திடீரென சூறாவளிக்காற்று பயங்கரமாக வீசியபடிப்பதைக் கண்டு தரையில் நடந்து சென்று கொண்டிருந்த மனிதன் திகைப்படைந்தான். அவன் அணிந்திருந்த உடைகளையெல்லாம் சூறாவளிக்காற்று உடலை விட்டுப் பிய்த்தெறிந்து விடுமோ என்று கவலைப்பட்டான்.
மனிதன் தான் அணிந்திருந்த உடைகளை இரண்டு கைகளாலும் இறக்கமாகப் பிடித்துக் கொண்டான். என்ன முயன்றும் சூறாவளிக் காற்றினால் அவன் உடைகளை அப்புறப்படுத்த முடியவில்லை. சூறாவளிக்காற்றின் முயற்சி தோல்வியுற்றது. அடுத்து சூரியன் தன் வல்லமையைக் காண்பிக்க முற்பட்டது.
திடீரென்று சூரியனின் உக்கிரம் அதிகமாயிற்று. வெப்பம் அந்த மனிதனின் உடலைச் சுட்டெரிப்பது போலத் தாக்கியது. புழுக்கம் தாங்க இயலாத அளவுக்கு அதிகமாகியது. வியர்வை கொட்டியது. மனிதனால் அந்த நிலையைச் சகித்துச் சமாளிக்க முடியவில்லை. தனது உடைகளை ஒவ்வொன்றாகக் களையத் தொடங்கினான். பந்தயத்தில் சூரியன் வெற்றி பெற்றுவிட்டது.
சூறாவளிக்காற்று தனது தோல்வியை பெருந்தன்மையுடன் ஒப்புக் கொண்டது.
டேய்... டேய்... சூரியா! நீ ரொம்ப மோசம்டா! இப்படியா எங்களை சுட்டெரிப்பாய்! ***

No comments:

Post a Comment