கதை காட்டுக்குள் இருந்து வழி தவறி வந்த அந்தப் புலி, எப்படியோ அந்த பன்னாட்டு நிறுவனத்தின் ரெஸ்ட் ரூமுக்குள் நுழைந்துவிட்டது.
ஆளரவத்தில் அரண்டு மிரண்டுபோன புலி, அந்த டாய்லெட்டின் ஓர் இருட்டு மூலையில் பதுங்கிக்கொண்டது. மூன்று நாட்கள் மூச்சு காட்டாமல் இருந்த புலிக்கு, பசி வயிற்றைக் கிள்ளியது. நாலாவது நாள்... பசி தாங்க முடியாமல் ரெஸ்ட் ரூமுக்குள் தனியாக வந்த ஓர் ஆளை அடித்துச் சாப்பிட்டது. அவர், அந்த நிறுவனத்தின் அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர். அவர் 'மிஸ்’ ஆனதைப்பற்றி அலுவலகத் தில் யாருக்கும் கவலை இல்லாததால், எந்த அதிர்வு நிகழ்வும் இல்லை. பயப்படும் படி எதுவும் நிகழவில்லை என்பதால் இரண்டு நாட்கள் கழித்து, இன்னும் ஒரு நபரை அடித்துச் சாப்பிட்டது புலி. அவர், அந்த நிறுவனத்தின் ஜெனரல் மேனேஜர். யாரும் அவரைத் தேடவும் இல்லை, காணவில்லையே என்று பதறவும் இல்லை. (சொல்லப்போனால் அவர் அலுவலகத்தில் இல்லையே என்று சந்தோஷப்பட்டவர்கள்தான் அதிகம்!)
![](http://new.vikatan.com/av/2011/03/09/images/p90.jpg)
அடுத்த நாள், நிறுவனத்தின் வைஸ் பிரசிடென்ட்டை ஏப்பம்விட்டார் புலியார். நிறுவனத்தில் குண்டூசி விழுந்த சலனம்கூட இல்லை. இதனால் குளிர்விட்டுப்போன புலி, நாம் வசிக்க ஏற்ற இடம் இதுதான் என்று தீர்மானித்து செட்டில் ஆனது. அடுத்த நாள் பசிக்கவே இல்லாவிட்டாலும், சும்மா இருக்கட்டுமே என்று ஒரு நபரை அடித்து மூர்ச்சையாக்கி, தனக்குப் பக்கத்தில் இருத்திக்கொண்டது. காபி கோப்பைகளைக் கழுவ வந்த அந்த நபர்தான் அலுவலகத்தின் பியூன். காபி வாங்கச் சென்ற பியூனைக் காணவில்லை என்று மொத்த அலுவலக மும் திமிலோகப்பட்டு, தேடுதல் வேட்டையைத் துவங்கியது. அடுத்த பத்தாவது நிமிடத்தில், ரெஸ்ட் ரூமில் மூர்ச்சையாகிக்கிடந்த பியூனையும், தொடர்ந்து புலியையும் கண்டுபிடித்துவிட்டார்கள். புலியை அடித்துத் துவைத்து, கூண்டுக்குள் அடைத்து ஜூவுக்கு அனுப்பிவைத்தார்கள்!
நீதி உங்களுக்கான நட்பு அல்லது மரியாதையை நிர்ணயிப்பது உங்கள் பதவியோ, செல்வமோ கிடையாது. நீங்கள் மற்றவர்களுக்கு எவ்வளவு உதவியாக இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது!
இப்படி, குட்டிக் குட்டிக் கதைகள், அதற்கான நீதிகள்தான் 'Tiger in the Toilet’ புத்தகம் முழுக்க. அனுதின அவசர ஓட்டத்தில் காபி பிரேக், கமர்ஷியல் பிரேக் இடைவேளைகளில்கூடப் படித்து ரசிக்கக்கூடிய புத்தகம்.
No comments:
Post a Comment